மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையை சேர்ந்த ரவணைய்யா நாயுடு என்பவரின் மனைவி மூதாட்டி புள்ளம்மாள் (வயது 70). இவர், கடந்த மாதம் 11-ந்தேதி வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு வீட்டிற்குள் செல்ல முயன்றபோது அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன், அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றான்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த வாலிபர் ஜான்பாண்டியன் (37) என்பவரை கவரைப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.