உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் அருகே மகளிர்குழு பெண்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி ரூ.1½ லட்சம் பறிப்பு

Published On 2022-11-15 12:27 IST   |   Update On 2022-11-15 12:27:00 IST
  • 2 வாலிபர்களும் காயத்ரி கையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் இருந்த பணப்பையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள கல்பட்டு ஊராட்சி ஆவாஜிப்பேட்டை எம்.ஜி.எம் நகரில் வசித்து வருபவர் காயத்ரி. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர். இவர் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஜோதிமா என்பவருடன் பெரியபாளையத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.1.70 லட்சம் கடன் வாங்கினார்.

பின்னர் இதற்கான காசோலையை வெங்கல் கிராமத்தில் உள்ள கனரா வங்கியில் பணமாக பெற்றனர். இதையடுத்து இருவரும் பஸ் மூலம் வெங்கல்- சீதஞ்சேரி நெடுஞ்சாலையில் கல்பட்டு கூட்டுச் சாலையில் இறங்கினர்.

அங்கிருந்து தங்களது வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென காயத்ரி, ஜோதிமா மீது மோதியது. இதில் அவர்கள் நிலைதடு மாறி கீழே விழுந்தனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் காயத்ரி கையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் இருந்த பணப்பையை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் மோதி சுய உதவி குழு பெண்களிடம் இருந்து பணப்பையை பறித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News