குழித்துறையில் ரெயில் முன் பாய்ந்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை
- அரசு பஸ் டிரைவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் வெட்டு மணி பகுதியைச் சேர்ந்தவர் வினு குமார் (வயது 47). இவர் செட்டிகுளம் அரசு பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சுஷ்மிதா. இவர், கேரளாவைச் சேர்ந்த சுதீர்குமார் என்பவரை திருமணம் செய்து 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார். அதன்பிறகு தான் 2016-ம் ஆண்டு வினுகுமாரை திருமணம் செய்துள்ளார். சுஷ்மிதாவுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த அனுகீர்த்தி (15) என்ற மகள் தாயுடனேயே உள்ளார். அவள் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வினுகுமார்-சுஷ்மிதா தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வினுகுமார் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை, தனது சகோதரருடன் திருமண விழாவுக்குச் செல்வதாக சுஷ்மிதாவிடம் கூறி உள்ளார். இரவில் வரமாட்டேன். நாளை தான் வருவேன் என்றும் கூறிச் சென்றுள்ளார். இந்த சூழலில் வினு குமார், குழித்துறையில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த வினு குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வினு குமார் வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பு, தனது மகனை அழைத்து முத்தம் கொடுத்துள்ளார். பின்னர் அவனுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து சென்றுள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
எனவே அவர் தற்கொலை முடிவை முதலிலேயே எடுத்திருக்கலாம் என தெரிகிறது. கணவன்-மனைவி பிரச்சனையில் அவர் தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
வினுகுமார் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அரசு பஸ் டிரைவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.