உள்ளூர் செய்திகள்

அருப்புக்கோட்டையில் பஸ் படியில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை தவறி விழுந்து காயம்

Published On 2022-11-30 06:18 GMT   |   Update On 2022-11-30 06:18 GMT
  • படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
  • அருப்புக்கோட்டை பகுதியில் இது போன்ற விபத்துகளை தடுக்க கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அருப்புக்கோட்டை:

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்ல போதுமான அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக அரசு பஸ்களில் படியில் நின்று மாணவர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி உயிர்பலி ஏற்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த மாதம் பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் நடந்த பின்பும் அந்த பகுதியில் போதிய அளிவில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால் தற்போது வரை மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் ஆகியோர் படியில் நின்றுகொண்டு பயணம் செய்யும் அவலநிலை உள்ளது. இன்று காலை அவ்வாறு பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அதன் விவரம் வருமாறு:-

விருதுநகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வளர்மதி(வயது 51). இவர் அருப்புக்கோட்டை அருகில் உள்ள மலைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இன்று காலை விருதுநகரில் இருந்து பாலவநத்தத்துக்கு அரசு பஸ்சில் வந்த அவர் அங்கிருந்து மலைப்பட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் டவுன் பஸ்சில் ஏறினார்.

அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வளர்மதியால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் அவர் படியில் நின்று கஷ்டப்பட்டு பயணம் செய்தார். மலைப்பட்டி அருகே பஸ் வந்தபோது கைப்பிடி நழுவி வளர்மதி தவறி கீழே விழுந்தார. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அருப்புக்கோட்டை பகுதியில் இது போன்ற விபத்துகளை தடுக்க கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News