உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே சமையல் செய்த போது குக்கர் வெடித்து தீ பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி

Published On 2023-01-07 12:48 IST   |   Update On 2023-01-07 12:48:00 IST
  • மூதாட்டி சுப்புலட்சுமி இன்று காலை வழக்கம் போல் கியாஸ் அடுப்பில் குக்கரில் சமையல் செய்தார்.
  • குக்கர் வெடித்து தீ பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முருகன்புதூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி (73). இவர்களுக்கு குணசேகரன்(50), சசிகுமார்(45) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நஞ்சப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலட்சுமியை விட்டு பிரிந்து சென்றார். இதையடுத்து சுப்புலட்சுமி தனது மூத்த மகன் குணசேகரன் பேரன் ரவி சேகர் ஆகியோருடன் வசித்து வந்தார். குணசேகரன் கடந்த சில ஆண்டுகளாக நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

மூதாட்டி சுப்புலட்சுமி இன்று காலை வழக்கம் போல் கியாஸ் அடுப்பில் குக்கரில் சமையல் செய்தார். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென குக்கர் வெடித்து தீ பிடித்தது.

அப்போது மூதாட்டி சுப்புலட்சுமியின் சேலையிலும் தீ பிடித்து எரிந்தது. இதனால் அவர் அலறி சத்தம் போட்டார். இதையடுத்து நடக்க முடியாமல் வீட்டில் இருந்த அவரது மகன் குணசேகரன் தவழ்ந்து வந்து தனது தாயை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் அதற்குள் சுப்புலட்சுமி உடல் முழுவதும் தீ பிடித்து அவரது மகன் கண் முன்னே உடல் கருகி பலியானார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து சுப்புலட்சுமி மீது எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குக்கர் வெடித்து தீ பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News