தூத்துக்குடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்- வாலிபர் படுகாயம்
- சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து வீடு தரைமட்டமானது.
- சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அம்பேத்கார்நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது25). இவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வீட்டில் இன்று காலை முத்துக்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் வெந்நீர் வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் முத்துக்குமார் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அவர் காலில் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து வீடு தரைமட்டமானது. மேலும் அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த கட்டில் துணிகள், பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.