உள்ளூர் செய்திகள்

சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

Published On 2022-07-04 06:57 GMT   |   Update On 2022-07-04 06:57 GMT
  • சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு பிரச்சினை செய்து வருகிறது.
  • இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கடந்த 2 ஆண்டுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் திருமங்கலம், கப்பலூர் வாகன ஓட்டிகளுக்கு உள்ளூர் கட்டணம் வசூலிக்க கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.

இதை தொடர்ந்து இன்று காலை கப்பலூர் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அங்கு பந்தல் அமைக்கும் பணி நடைபெறுவதை அறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை.

எனவே பந்தல் அமைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பந்தல் அமைக்க அனுமதி அளிக்காததால் தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வம், ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி மற்றும் மாநில நிர்வாகிகள் ஜான் மகேந்திரன், வெற்றிவேல், உச்சப்பட்டி செல்வம், சாமிநாதன் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் போலீசார் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம். போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிடாததால் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை கைது செய்ய முற்பட்ட போது, தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதனால் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி பஸ்சில் ஏற்றினர்.

இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு பிரச்சினை செய்து வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் நகர் மற்றும் கப்பலூர் வாகன ஓட்டிகளுக்கு 2 ஆண்டு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது திருமங்கலம் பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு திருமங்கலம் நகர் பஸ்கள் ரூ.28 கோடி சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக சுங்கச்சாவடியை அகற்ற மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்.

ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுக்கிறது. தேர்தல் வாக்குறுதியின் போது கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த தமிழக முதல்-அமைச்சர் தற்போது வரை அதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News