உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published On 2022-07-05 07:51 GMT   |   Update On 2022-07-05 12:40 GMT
  • பொதுக்குழுவுக்கு தேவை இல்லாத வகையில் 3-வது நபர்கள் மற்றும் சமூக விரோதிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
  • போலீஸ் தரப்பில் எங்களது மனுவை ஏற்றுக் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க உறுதி அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் இன்று டி.ஜி.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-

வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு சட்ட ரீதியாக நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

பொதுக்குழுவுக்கு தேவை இல்லாத வகையில் 3-வது நபர்கள் மற்றும் சமூக விரோதிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் எங்களது மனுவை ஏற்றுக் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க உறுதி அளித்துள்ளனர்.

இதன்படி சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் வகையில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி:-சமூக விரோதிகள் ஓ.பி.எஸ். ஆட்களா?

பதில்:- கட்சியின் சட்ட விதிகளின்படி பொதுக்குழு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சமூக விரோதிகளாக யார்? வருவார்கள் என்பதை எல்லாம் குறிப்பிட்டு சொல்ல முடியுமா? பிரச்சினை ஏற்படாமல் பொதுக்குழு நடைபெற வேண்டும் என்கிற எண்ணத்திலேயே பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி:-கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழு கூட்டத்தை காணொலியில் நடத்த வாய்ப்புகள் உள்ளதா?

பதில்:-தற்போது வரை சூழல் ஏற்படவில்லை. இருப்பினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

கேள்வி:-15 நாட்களுக்கு முன்பே பொதுக்குழு கூட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும், அது கடைபிடிக்கப்படவில்லை என்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் கூறியுள்ளனரே?

பதில்:-23-ந்தேதியே பொதுக்குழுவுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி பார்த்தால் 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

கேள்வி:-அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என்று சசிகலா கூறி வருகிறாரே?

பதில்:-இது வீண் முயற்சி. தினகரன் ஒரு பக்கமாக வண்டியை தூக்கிக் கொண்டு செல்கிறார். சசிகலா ஒரு பக்கமாக வண்டியில் போகிறார். இருவரும் நேரத்தைதான் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்தும் பெட்ரோலும் வீணாகி கொண்டே இருக்கிறது.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Tags:    

Similar News