பொன்னேரி அருகே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் 'திடீர்' தர்ணா போராட்டம்
- விவசாயிகள் ஏராளமானோர் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார்பு ஆட்சியர் ஐஸ்வர்யாவை சந்திக்க சென்றனர்.
- ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி வட்டத்தில் உள்ள ஏரி நீரை பயன்படுத்தி பாசனம் செய்யும் 121 விவசாயிகள் சங்கங்களுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி நிறைவடைந்தது. அன்றைய தினமே, வேட்புமனு தாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மனுக்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில், விளைநில பட்டா அல்லாதவர்கள், மற்றும் இறந்தவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து முறையிடுவதற்காக விவசாயிகள் ஏராளமானோர் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார்பு ஆட்சியர் ஐஸ்வர்யாவை சந்திக்க சென்றனர். அப்போது அவர் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் செல்வகுமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தார்.