உள்ளூர் செய்திகள்

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள்

Published On 2022-12-27 09:31 IST   |   Update On 2022-12-27 09:31:00 IST
  • கடந்த பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக நீர்வரத்து அதிகமாக காணப்பட்டன.
  • காட்டூரான் கால்வாய் அணைக்கட்டு 4 அடி உயரம் உயர்த்தி கட்டியதால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் சென்று 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் விவசாய நிலங்கள் கடந்த இரண்டு மாதமாக நீரில் மூழ்கியுள்ளன.

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த காட்டூர் தத்தை மஞ்சி ஏரிகளை இணைத்து பொதுப்பணித்துறை மூலம் நீர்த்தேக்க சேமிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காளியம்பாக்கம் வெள்ளகுளம் சிங்கிலி மேடு சிறுவாக்கம் தடப்பெரும்பாக்கம் ஆளாடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் ஆரணி ஆற்றின் உபரி நீர் கால்வாய் வழியாக காட்டூர் தத்தை மஞ்சு ஏரியில் சென்று உபரி நீர் பழவேற்காடு கடலில் கலக்கின்றன.

கடந்த பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக நீர்வரத்து அதிகமாக காணப்பட்டன. இந்நிலையில் ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காட்டூரான் கால்வாய் அணைக்கட்டு 4 அடி உயரம் உயர்த்தி கட்டியதால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் சென்று வேலூர் அத்தமஞ்சேரி எரிபிள்ளை குப்பம் மனோபுரம், கொளத்தூர், பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் விவசாய நிலங்கள் கடந்த இரண்டு மாதமாக நீரில் மூழ்கியுள்ளன. இதனால்பாதிக்கப்பட்ட விவசாயிகள் இரண்டு போகும் விளைவிக்கக்கூடிய இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகியுள்ளன எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தேங்கியுள்ளமழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி விவசாயி தேவராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொன்னேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகளிடம் பேசிய அதிகாரிகள், சார் ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் வந்து அலுவலகம் முன்பு சமையல் செய்து சாப்பிடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News