கீழ்பவானி வாய்க்காலில் சுவர் அமைக்க எதிர்ப்பு- விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று கடைகள் அடைப்பு
- டீ, பேக்கரி, உரக்கடைகள், மளிகை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
- பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் வழக்கம் போல் திறந்து இருந்தன.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் 19-வது மைல்கல் பகுதியில் கான்கீரிட் பக்கவாட்டு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
விவசாயிகள் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று கடையடைப்பு நடத்த வணிகர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வணிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அதன்படி இன்று நம்பியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய தாலுகாவில் உள்ள எலத்தூர், செட்டிபாளையம், கூடகரை, ஆண்டிபாளையம், கடத்தூர், கரட்டுபாளையம், குருமந்தூர், அரசூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. டீ, பேக்கரி, உரக்கடைகள், மளிகை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் வழக்கம் போல் திறந்து இருந்தன.