உள்ளூர் செய்திகள்

பன்னீர் கரும்புடன் விவசாயிகள் சாலை மறியல்

Published On 2022-12-23 07:09 GMT   |   Update On 2022-12-23 07:09 GMT
  • பன்னீர் கரும்புடன் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் விவசாயிகள் மறியல் செய்தனர்.
  • மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பன்னீர் கரும்பை சாகுபடி செய்துள்ளனர்.

இந்த கரும்பு பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யப்படும். முன்னதாக இந்த கரும்பை வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் நேரிடையாக கரும்புக்கு பணம் கொடுத்து விடுவார்கள். இதனால் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பொங்கல் தொகுப்பின் போது பன்னீர் கரும்பு வழங்கப்பட்டு வந்தது.

இதேபோல் தி.மு.க. ஆட்சி வந்ததும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று காலை ஏராளமான விவசாயிகள் ஒன்று திரண்டனர். அவர்கள் பன்னீர் கரும்புடன் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யாததால் எங்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மறுபரிசீலனை செய்து பன்னீர் கரும்பு பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News