உள்ளூர் செய்திகள்

வேளாண் அதிகாரிகளை கண்டித்து ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் சாலை மறியல்

Published On 2022-06-23 11:10 GMT   |   Update On 2022-06-23 11:10 GMT
  • மாவட்ட கலெக்டரிடம் மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் பலர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
  • இதை கண்டித்து ஆத்தூர் உழவர் சந்தை எதிரே விவசாயிகள் பச்சை நிற உடை அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தைக்கு ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தலைவாசல் சுற்றுவட்டார நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு வந்து தினந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த உழவர் சந்தையில் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகம்பேர் போலியான உழவர் அட்டை வைத்துக்கொண்டு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.

மேலும் இங்கு பணியாற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகளை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவதாகவும் அரசுத்துறை அலுவலர்கள் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் தக்காளியை கொண்டுவந்து கூடுதல் விலை நிர்ணயம் செய்து உழவர் சந்தையில் விற்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

மாவட்ட கலெக்டரிடம் மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் பலர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதை கண்டித்து ஆத்தூர் உழவர் சந்தை எதிரே விவசாயிகள் பச்சை நிற உடை அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி விவசாயி மணிமேகலை கூறும்போது, ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருள்களுக்கு விற்பனை செய்ய முடியவில்லை. போலியான உழவர் அட்டை வைத்து பலர் உழவர் சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

அரசுத்துறை அலுவலர்கள் தங்களுக்கு தேவையானவர்களுக்கு விளைபொருட்களின் விலை கூடுதலாக போட்டு விற்பனை செய்ய அனுமதி வழங்கி வருகின்றனர். மேலும் பெண்களை இழிவாக பேசி வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

மீனா என்ற பெண் விவசாயி கூறும்போது, இங்கு பணியாற்றும் சின்னதுரை என்ற வேளாண்மை அலுவலர் பெண்களை இழிவாக பேசி தரக்குறைவாக பேசி வருகிறார். மேலும் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போலியான அட்டைகளை வழங்கி உள்ளார். இது குறித்து கலெக்டரிடமும், அதிகாரிகளிடமும் புகார் செய்தும் எந்த பலனும் அளிக்கவில்லை என்றார்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News