உள்ளூர் செய்திகள்

கீழ்பவானி வாய்க்காலில் பக்கவாட்டு கான்கிரீட்தளம் அமைக்க எதிர்ப்பு- மாசாணி அம்மனுக்கு அபிஷேகம் செய்து விவசாயிகள் போராட்டம்

Published On 2023-07-12 16:32 IST   |   Update On 2023-07-12 16:32:00 IST
  • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • போராட்டத்தில் பெண்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் வர மிளகாய் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 6-வது நாளாக கருத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கீழ்பவானி பாசன பகுதிகளான எலத்தூர் செட்டிபாளையம், ஆண்டிபாளையம், கடத்தூர், அரசூர், குருமந்தூர், கரட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கீழ்பவானி பாசனப்பகுதிகள் உள்ளது. இதில் கான்கிரீட் தளம் அமைக்கப்பெற்றால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் கசிவு நீர் குட்டைகளின் தண்ணீர் வரத்து முற்றிலுமாக தடைபடும் என கூறி கடந்த 6 நாட்களாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

நாங்கள் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். முழுவதுமாக மண்ணால் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலில் திடீரென பக்கவாட்டு பகுதியில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டால் சுமார் 3000 ஏக்கருக்கு மேல் கசிவுநீர் குட்டைகள் மூலம் நடைபெற்று வரும் விவசாய பணிகள் பாதிப்பு ஏற்படும்.

ஏற்கனவே நம்பியூர் அருகே உள்ள ஆண்டிபாளையம், கடத்தூர் பகுதிகளில் சுமார் 3 கி.மீ அளவிற்கு கான்கிரீட் சுவர் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதே அளவு கிழக்கு பகுதியிலும் அமைக்க தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது அமைக்கப்பட்டால் முற்றிலுமாக கசிவுநீர் குட்டைக்கு செல்லும் தண்ணீர் தடைபடும். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் மேற்கொண்டு கான்கிரீட் தளம் அமைப்பிலேயே குறியாக உள்ளனர்.

இந்நிலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் சார்பில் எ.செட்டிபாளையம் கீழ்பவானி வாய்க்காலில் 19-வது மைல் இடது கரை பகுதியில் தோண்டிய புதிய குழியினை மண் கொண்டு மூடக்கோரியும், அப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பதை எதிர்த்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் கோபிசெட்டிபாளையம் பொதுப்பணி துறை (நீர்வள ஆதார துறை) அதிகாரி ஆனந்தராஜ், கோபிசெட்டிபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் நம்பியூர் தாசில்தார் மாலதி ஆகியோர் விவசாயிகளின் முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து வாய்க்காலின் இடது கரையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் தோண்டிய இடத்தில் மண் கொண்டு மூடக்கோரிய விவசாயிகளின் கோரிக்கை மறுத்து அவ்விடத்தில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டிய அவசியம் பற்றி நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஆனந்தகுமார் பேசியதை விவசாயிகள் தரப்பில் ஏற்க மறுத்து தோண்டிய இடத்தில் மண் கொண்டு மூடும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறி போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.

மேற்படி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் பெண்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் வர மிளகாய் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் நடைபெறும் என கூறினர். அதேபோல கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை முற்றிலும் நிறுத்தும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News