உள்ளூர் செய்திகள்

எண்ணூரில் ரவுடி கொலை- மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2022-07-23 12:05 IST   |   Update On 2022-07-23 12:05:00 IST
  • சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 23வது பிளாக்கை சேர்ந்தவர் உமர் பாஷா.
  • பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவொற்றியூர்:

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 23வது பிளாக்கை சேர்ந்தவர் உமர் பாஷா (வயது 32). சென்னை அரும்பாக்கத்தில் பீரோ கம்பெனி வைத்து தொழில் செய்து வந்தார்.

சென்னையை கலக்கிக் கொண்டிருக்கும் தாதாவான டிபி சத்திரம் ராதா என்பவரின் வலது கரமாக செயல்பட்டு வந்த உமர்பாஷா மீது 10-க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. உமர் பாஷா நேற்றிரவு பாரதியார் நகர் 5-வது தெருவில் உள்ள மசூதியில் தொழுகை செய்து விட்டு பின் மோட்டார் சைக்கிளில் அதே தெரு வழியாக வீடு திரும்பி உள்ளார்.

அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் உமர் பாஷாவை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடினர்.

இதில் மூளை சிதறி வெளியே வந்த நிலையில் நிலைகுலைந்து சரிந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன் உதவி கமிஷனர் பிரம்மானந்தம், எண்ணூர் இன்ஸ்பெக்டர் கிளாஸ்டின் டேவிட் மற்றும் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் டோனி வரவழைக்கப்பட்டு அது பாரதியார் நகர் மெயின் ரோடு வரை சென்று நின்று விட்டது.

எண்ணூர் போலீசார் இறந்த உமர்பாஷாவின் உடலை கைப்பற்றி, பிரேத சோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து அருகிலுள்ள "சிசிடிவி" காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

கொலையாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய பட்டா கத்திகளையும், புதியதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்தில் விட்டு கிடந்தது அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

கொலை செய்யப்பட்ட உமர் பாஷா மீது வழக்குகள் உள்ளதால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News