உள்ளூர் செய்திகள்

சாலையில் உலா வரும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்

Published On 2024-03-23 03:53 GMT   |   Update On 2024-03-23 03:53 GMT
  • யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
  • மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருகின்றன.

பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியில் நேற்று மதியம் ஒரு காட்டுயானை சாலை ஓரத்தில் நின்றபடி அங்கும், இங்குமாக நடமாடியது. யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். பஸ் மற்றும் காரில் சென்ற பயணிகள் சிலர் காட்டுயானையை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரம் இருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

திம்பம் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் காட்டுயானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும், மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News