உள்ளூர் செய்திகள்

செயல்படாத திட்டத்துக்கு வெற்று விளம்பரம் தேடும் தி.மு.க.- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On 2022-08-07 06:50 GMT   |   Update On 2022-08-07 06:50 GMT
  • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் இன்றைய அவல நிலை குறித்து பலதரப்பட்ட மக்களின் புலம்பல்கள் ஊடகங்களில் வருகின்றன.
  • அரசின் துறைகள் ஒவ்வொன்றும் மக்களின் நலனுக்கான திட்டங்களை தீட்டி செயல்பட வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. அரசால் 'அம்மா மினி கிளினிக்' என்று ஆரம்பிக்கப்பட்டு சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளுக்கு அருகே உள்ள 'அம்மா மினி கிளினிக்'குகளுக்கு சென்று மருத்துவ உதவி பெற்று வந்த ஒரு அற்புதமான திட்டத்தை மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஒரு திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கி 'மக்களை தேடி மருத்துவம்' என்ற ஒரு பயன் இல்லாத திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கு பிரமாண்டமாய் ஒரு தொடக்க விழாவை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த விடியா தி.மு.க. அரசு நடத்தியது. தற்போது அந்த திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று தமிழக மக்களுக்கு தெரியவில்லை.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் இன்றைய அவல நிலை குறித்து பலதரப்பட்ட மக்களின் புலம்பல்கள் ஊடகங்களில் வருகின்றன. அரசின் துறைகள் ஒவ்வொன்றும் மக்களின் நலனுக்கான திட்டங்களை தீட்டி செயல்பட வேண்டும். குறிப்பாக மக்கள் நல்வாழ்வு துறை மக்களின் உயிரை காக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

கடந்த 14 மாத கால தி.மு.க. ஆட்சியில், அம்மா அரசின் பல்வேறு நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கியதோடு அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் பணியை கண்ணும் கருத்துமாக மக்கள் நல்வாழ்வுத்துறை செய்து வருகிறது.

அம்மா அரசின் ஆட்சியில் கொரோனாவிற்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாத காலத்தில் தனியார் மருத்துவமனைகள் பல இயங்காத நேரத்தில் இப்போதுள்ள அதே அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து கொரோனாவிற்கும், மற்ற அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தனர்.

குறிப்பாக அரசு மகப்பேறு மருத்துவமனைகள் மூலம் பயனடைந்த தாய்மார்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததை நான் இங்கு நினைவு கூர்கிறேன். அதே அரசு மருத்துவமனைகளுக்கே மக்கள் செல்ல அஞ்சும் நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

வெற்று விளம்பரத்திற்காக மக்களை தேடி மருத்துவம் என்று அறிவித்து விட்டு முதல்-அமைச்சரை வைத்து போட்டோ ஷூட் நடத்திவிட்டு மக்களை தேடி மருத்துவத்தை தேடி அலைய வைக்கும் போக்கை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி அரசியலை ஓரம்கட்டிவிட்டு, மக்களின் நலனுக்காக அம்மாவின் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மீண்டும் தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News