கட்சி அதிகாரத்தை கைப்பற்ற தீவிரம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று தனித்தனியே ஆலோசனை
- அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை மட்டுமே இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
- மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்பாலானோர் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தியே பேசி வருகிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி நடக்க இருக்கிறது. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும், என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பாக நேற்று அ.தி.மு.க. தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற விவாதம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் எழும்பியதுமே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது இல்லங்களில் ஆதரவாளர்களுடன் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். கட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று 2-வது நாளாக எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் , நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் இன்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், வேளச்சேரி அசோக் மற்றும் 2 மாவட்ட செயலாளர்கள் என அவரது ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பல்வேறு கருத்துக்களும் வலியுறுத்தப்பட்டன. இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என அனைத்து கட்சிகளும் ஒற்றை தலைமையுடனேயே செயல்படுகின்றன. அ.தி.மு.க.வில் மட்டுமே இரட்டை தலைமை உள்ளது.
இரட்டை தலைமையால் முடிவுகளை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கட்சிகளின் நலன் சார்ந்த விஷயங்களிலும், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் முடிவுகள் எடுப்பதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை மட்டுமே இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்பாலானோர் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தியே பேசி வருகிறார்கள்.
ஆனால் அதே நேரத்துல ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதய குமார், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்திய பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் விவாதித்த விஷயங்கள் தொடர்பாக அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறி ஆலோசனை செய்தனர்.
இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை என்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றை தலைமை கோஷம் மூலம் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபடும் அபாயமும் உருவாகி உள்ளது.