உள்ளூர் செய்திகள்

100 பவுன் நகை, ரூ.5 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- 10 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2023-02-16 07:36 GMT   |   Update On 2023-02-16 07:36 GMT
  • கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியதால் திருமண வாழ்க்கை கசந்தது.
  • பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி கலிங்கப்பட்டி கீரணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவருக்கும் மருங்காபுரி சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (29) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் ஜீவானந்தத்துக்கு நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து தம்பதியினர் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர். திடீரென்று கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியதால் திருமண வாழ்க்கை கசந்தது.

இந்த நிலையில் கணவர் ஜீவானந்தம், மாமியார் சரஸ்வதி மற்றும் உறவினர்கள் சின்னையன், குமார், மகாலட்சுமி, கவிதா, கோமதி, பாலசுப்பிரமணியன் வடிவேல், கலையரசி ஆகிய 10 பேரும் சேர்ந்து முத்துலட்சுமியிடம் கூடுதலாக 100 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம் கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர், இந்த அளவுக்கு மீண்டும் நகை, பணம் எனது பெற்றோரால் தர இயலாது. அந்த அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை என எடுத்து கூறியுள்ளார். இருந்தபோதிலும் அவரைத் தொடர்ந்து கணவர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஜீவானந்தம் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News