உள்ளூர் செய்திகள்

தொகுதி பங்கீட்டுக்கு கூட்டணி கட்சிகளின் பலத்தை அறிய தி.மு.க. அதிரடி வியூகம்

Published On 2023-09-14 15:12 IST   |   Update On 2023-09-14 15:12:00 IST
  • வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்டது போல் 9 தொகுதிகள் குறையக் கூடாது என்று எதிர்பார்க்கிறது.
  • கூட்டணி கட்சிகளின் பூத் கமிட்டியுடன் தி.மு.க. பூத் கமிட்டியினரும் இணைந்து பணியாற்ற உதவும் என்று கூறப்பட்டு உள்ளது.

சென்னை:

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மும்பையில் சரத்பவார் இல்லத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தொகுதிகளை தீர்மானிக்கும் பணியை உடனே தொடங்கவும், தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்கவும் திட்டமிடப்பட்டது.

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தை போபாலில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு முன்னதாகவே தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று கூட்டணி தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் தி.மு.க. கூட்டணி இடம்பெற்று உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. பங்கீடு கொடுத்திருந்தது.

அதில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் 2 கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளிலும், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

இந்த கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சி விலகி பா.ஜனதாவுக்கு ஆதரவாக உள்ளது. அதே நேரம் கமல் இந்த கூட்டணியில் இணைகிறார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்டது போல் 9 தொகுதிகள் குறையக் கூடாது என்று எதிர்பார்க்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் 3 தொகுதிகள் எதிர்பார்க்கிறது. புதிதாக இணையும் கமலுக்கு ஒரு தொகுதி ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆனால் அவரும் 2 தொகுதிகள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் ம.தி.மு.க.வும் 2 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. அதற்கு காரணம் வைகோவின் மகன் துரை வைகோ முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். எனவே கட்சி பிரதிநிதி ஒருவருக்கும் சீட் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

திருமாவளவன் 3 தொகுதிகள் கேட்பதோடு தான் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதிக்கு பதிலாக காங்கிரஸ் கைவசம் இருக்கும் ஒரு தொகுதியை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 2 காங்கிரஸ் தொகுதிகளில் போட்டியிட தி.மு.க.வினரின் வாரிசுகள் தீவிரமாக இருப்பதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல்கள் எழுந்துள்ளது. இந்த சிக்கல்களை தவிர்க்கவும் கடைசி நேரத்தில் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்கவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

முக்கியமாக இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் இருந்து 40 தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார்.

அதற்கேற்ப எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் உண்மையிலேயே பலமாக உள்ளன என்பதை அறிந்து தொகுதிகளை ஒதுக்கவும் திட்டமிட்டு உள்ளார்.

எனவே இந்த முறை இந்த தொகுதியில் நாங்கள் செல்வாக்கோடு இருக்கிறோம் என்று வாய்வழியாக சொல்வதை ஏற்க கூடாது என்பதில் தி.மு.க. தலைமை உறுதியாக உள்ளது.

எனவே கூட்டணி கட்சிகளிடம் அவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதி அந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகளின் பட்டியல் ஆகியவற்றை வழங்க கேட்டு உள்ளனர்.

கூட்டணி கட்சிகளின் பூத் கமிட்டியுடன் தி.மு.க. பூத் கமிட்டியினரும் இணைந்து பணியாற்ற உதவும் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் உண்மையான பலத்தை ஆய்வு செய்யவே தி.மு.க. தலைமை இந்த பட்டியலை கேட்டிருப்பதாக தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தி.மு.க.வை பொறுத்தவரை கிளை கழகம் வரை அமைப்பு ரீதியாக பலமாக இருக்கிறது. இந்த நிலையில் பூத் கமிட்டிகளின் எண்ணிக்கை, பலத்தை பொறுத்தே தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தி.மு.க. விதித்துள்ள நிபந்தனை காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, கூட்டணியாக தேர்தலை சந்திக்கும்போது கட்சிகளிடையே விட்டுக் கொடுத்தும், ஒத்துழைத்தும் பணியாற்றினால்தான் வெற்றி பெற முடியும் என்றார்.

Tags:    

Similar News