அரக்கோணம் அருகே நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் தி.மு.க பிரமுகர், வி.ஏ.ஓ. கைது
- நெல் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.
- வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 30 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில், அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு, நெல் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.
வேலூர் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விசாரணை நடத்தினர்.
அதில், தனியார் வியாபாரிகள், எவ்வித நிலம் மற்றும் ஆவணங்களின்றி, ரூ.8 கோடி ரூபாய் மதிப்புக்கு மேல் நெல் கொள்முதல் செய்துள்ளனர்.
இதனால் அரசின் ஊக்கத்தொகையை தனியார் வியாபாரிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து விவசாயிகளுக்கு கிடைக்கவிடாமல், பங்கு போட்டுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் இதுவரை வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 30 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அரக்கோணம் அடுத்த சிறுகரும்பூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் குமரவேல் பாண்டியன், மேல்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
குமரவேல் பாண்டியன் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்ததாக போலியாக அடங்கல் சீட்டு கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் வழங்கியுள்ளார்.
இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.