உள்ளூர் செய்திகள்

உத்திரமேரூர் அருகே பழங்கால மனிதர்கள் கல் ஆயுதத்தை தீட்ட பயன்படுத்திய இடம் கண்டுபிடிப்பு

Published On 2022-06-05 15:43 IST   |   Update On 2022-06-05 15:43:00 IST
  • பட்டை தீட்டிய இடங்களே நாங்கள் கண்டறிந்த இந்த கற்குழிகளாகும்.
  • அமரக்கல் குன்றானது மிகப்பெரிய பாறைகளை கொண்டதாக உள்ளது.

காஞ்சிபுரம்:

உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை தீட்ட பயன்படுத்திய இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதனை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் மற்றும் அவரது குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறிதாவது:-

சாலவாக்கம், எடமிச்சி காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள அமரக்கல்குன்று மற்றும் இரண்டு பாறைகளை களஆய்வு செய்தபோது, கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை பட்டை தீட்டிய வழவழப்பான கற்குழிகளை கண்டறிந்தோம்.

இது கி.மு.3 ஆயிரத்தில் இருந்து கி.மு. 10ஆயிரம் வரை இதன் காலம் இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

பழங்கால மனிதர்கள் முதலில் வேட்டைக்காக மரங்கள் மற்றும் எலும்புகளால் ஆன கருவிகளை பயன்படுத்தினர். அது பயன்பாட்டில் நாளடைவில் சிதைந்தும் அழிந்தும் போனது. இதற்கு மாற்றாக, நிலைத்து நிற்கக்கூடிய வகையில் எளிதில் சிதையாத கல் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அந்த ஆயுதங்கள் சொர சொரப்பாக இருந்தது இதனால் வேட்டையாடுவதிலும் பயன்படுத்துவதிலும் பல சிரமங்கள் தோன்றின. அதை களைவதற்காக வேட்டைக் கருவிகளை வழுவழுப்பாக பட்டை தீட்ட தொடங்கினார்கள்

அவ்வாறு பட்டை தீட்டவும் கூர் செய்வதற்கும் நீர் தேவைப்பட்டது. அதனால் நீர் தேங்கும் மலைப் பகுதிகளையும் பாறைகளையும் தேர்வு செய்தார்கள். ஆகவே நீர் தேங்கும் அளவிலான சுனைகளை கொண்ட இந்த அமரக்குன்று மற்றும் நீர் தேங்கும் வசதிகள் உள்ள இந்த பாறைகளை பயன்படுத்தி உள்ளார்கள். அவ்வாறு பட்டை தீட்டிய இடங்களே நாங்கள் கண்டறிந்த இந்த கற்குழிகளாகும்.

அமரக்கல் குன்றானது மிகப்பெரிய பாறைகளை கொண்டதாக உள்ளது. அதன் நடுவில் நீர் தேங்கும் பெரிய சுனை ஒன்று உள்ளது.அதன் அருகில் நான்கு இடங்களில் வெவ்வேறு அளவுகளில் வழவழப்பான குழிகள் இருப்பதை கண்டறிந்தோம்அதில் ஒரு குழி 21 சென்டி மீட்டர் நீளமும் 10 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. மேலும் வெவ்வேறு அளவுகளில் இரண்டு குழிகள் காணப்பட்டன அந்த குழிகளை ஆய்வு செய்த பொழுது அதுகற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்களை கூர்மை செய்ய அல்லது பட்டை தீட்டிய அடையாளம் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவ்விடத்திற்கு அருகில் உள்ள இரண்டு பெரிய பாறைகளிலும் இதே போன்ற நீர் தேங்கும் சுனைகளும் அதற்கு அருகிலேயே பல்வேறு அளவுகளில் 9 இடங்களில் வழவழப்பான பல்வேறு குழிகளை கண்டறிந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News