கண்டலேறு-பூண்டி கால்வாயை சீரமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்
- குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் ஒன்று பூண்டி ஏரி.
- கண்டலேறு-பூண்டி கால்வாயின் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியை ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் ஒன்று பூண்டி ஏரி.
ஆந்திர அரசுடனான கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோமீட்டர் தூரம் கால்வாய் அமைக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் உள்ளது.
இந்த நிலையில் கண்டலேறு-பூண்டி கால்வாயின் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியை ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
மே 8-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை 2.67 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்தாலும் சமீபத்தில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 'ஒரு சில நாட்களில் ஏரிக்கு நீர் வரத்து நின்றுவிடும் என்று எதிர்பார்க்கிறோம். கண்டலேறு-பூண்டி கால்வாயின் 3.8 கி.மீ பாயிண்ட் முதல் 10-வது கிலோ மீட்டர் வரை சேதமடைந்த பகுதிகளில் கான்கிரீட் அமைக்கும் பணி தொடங்கப்படும்' என்றார்.
ரூ.24 கோடி மதிப்பிலான பணிகளில் 40 சதவீதம் இன்னும் முடியாமல் உள்ளது. அப்பணிகளை செய்து முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.