உள்ளூர் செய்திகள்

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-08-10 09:36 GMT   |   Update On 2023-08-10 09:37 GMT
  • ஊதிய உயர்வு இல்லாமல் தூய்மை பணியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
  • ஒரே மாதிரியான வேலைக்கு அனைவருக்கு ஒரே மாதிரியான சம்பளத்தை வழங்க வேண்டும்.

கோவை:

கோவை மாநகரில் 100 வார்டுகள் உள்ளன. இந்த 100 வார்டுகளில் தேங்கும் குப்பைகளை அகற்றுவது உள்பட பல்வேறு பணிகளை தூய்மை பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

கோவை மாநகராட்சியில் 2,400 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1,800 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரியும், பல ஆண்டுகளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருபவர்களை நிரந்த ஊழியர்களாக ஆக்கவும் வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊதிய உயர்வு இல்லாமல் தூய்மை பணியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணியை தனியார் மயமாக்க உள்ளது.

இதனை கைவிட வலியுறுத்தியும், ஆண்டுக்கணக்கில் கூலி தொழிலாளர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு இருந்து ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக கருப்புகொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.

இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த ஊர்வலத்தை கோவை-ஓசூர் சாலையில் அ.தி.மு.க. அலுவலகம் அருகே தடுப்புகள் வைத்து அடைத்து போலீசார் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

தமிழக அரசு தூய்மை பணியை தனியார் மயத்திடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர் நிரந்தர பணியிடங்களை தனியாருக்கு, தாரை வார்க்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையானது தூய்மை பணியாளர்களுக்கு எதிரானது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்வதுடன், தூய்மை பணி தனியார் மயத்தையும் கைவிட வேண்டும்.

ஒரே மாதிரியான வேலைக்கு அனைவருக்கு ஒரே மாதிரியான சம்பளத்தை வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக எங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News