உள்ளூர் செய்திகள்

சின்னமனூரில் குடிபோதையில் வாலிபரை குத்திக் கொன்ற கும்பல்

Published On 2023-07-14 10:28 IST   |   Update On 2023-07-14 10:28:00 IST
  • செல்போன் தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கொலையாளி ஒண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (வயது 24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். வினோத்குமாரின் நண்பரான யுவராஜாவின் செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி என்பவர் பறித்து சென்று விட்டார்.

நேற்று இரவு யுவராஜூடன் சென்று சின்னமனூர் வாரச்சந்தை அருகே மதுபோதையில் இருந்த ஒண்டியிடம் தனது நண்பரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த யுவராஜாவை ஒண்டியின் நண்பர்கள் தடுத்துள்ளனர்.

பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுப்பிரமணி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

செல்போன் தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளி ஒண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News