உள்ளூர் செய்திகள்

நுகர்பொருள் வாணிப கழகத்தில் கருணை அடிப்படையில் 75 பேருக்கு பணி நியமனம்: முதல்-அமைச்சர் வழங்கினார்

Published On 2022-10-12 15:19 IST   |   Update On 2022-10-12 15:19:00 IST
  • பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • 12,177 நபர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1500 வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 82 லட்சத்து 65 ஆயிரத்து 500 வழங்கிடும் அடையாளமாக 15 நபர்களுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவந்த 586 பருவகால பட்டியல் எழுத்தர்கள், உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர்கள் ஆகியோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கழகத்தின் பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில், நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் சுமைதூக்கும் பணியாளர்கள் 12,177 நபர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1500 வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 82 லட்சத்து 65 ஆயிரத்து 500 வழங்கிடும் அடையாளமாக 15 நபர்களுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News