உள்ளூர் செய்திகள்

சென்னை பெண்ணிடம் ரூ.10.50 லட்சம் நூதன மோசடி- 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2022-09-28 10:47 IST   |   Update On 2022-09-28 10:47:00 IST
  • சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி மீனா.
  • சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை தேடி வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி மீனா. இவர் அடிக்கடி தேனியில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சிவகிரியை சேர்ந்த செல்வகிருஷ்ணன் என்பவருக்கும், மீனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

செல்வகிருஷ்ணனை அப்பா என்று அழைத்து வந்த மீனா அடிக்கடி அவரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் செல்வகிருஷ்ணன் மீனாவிடம் பேசும்போது, ரூ.16 லட்சம் கொடுத்தால் உடனே ரூ.22 லட்சம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியதால் இதனை நம்பிய மீனா சென்னையில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி கொண்டு தனது நகைகளை அடகு வைத்தும் மொத்தம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் திரட்டியுள்ளார்.

பின்னர் அந்த பணத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த மீனா செல்வகிருஷ்ணன் கூறியபடி ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் வைத்து தென்காசி மாவட்டம் புதூர் செந்தட்டியா புரத்தை சேர்ந்த பால்துரை என்பவரிடம் ரூ.10 லட்சத்து 56 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்று கொண்ட பால்துரை புரோநோட்டில் மீனாவிடம் கையெழுத்து பெற்றதாக தெரிகிறது. பின்னர் ஒரு நபரை சந்தித்து வருகிறேன் என்று கூறிவிட்டு சென்ற பால்துரை நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா செல்போனில் செல்வகிருஷ்ணனை தொடர்பு கொள்ள முயன்றார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 2 பேரும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை உணர்ந்த மீனா இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை தேடி வருகிறார்.

Similar News