ஈரோட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.14 லட்சம் செல்போன்கள் திருட்டு
- ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கீழ் பகுதியில் செல்போன் கடை செயல்பட்டு வருகிறது.
- மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக நிறுவன பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கீழ் பகுதியில் செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் பங்குதாரராக ஈரோட்டை சேர்ந்த பூபதி, கோவையை சேர்ந்த தரணிதரன் உள்ளனர்.
இந்த கடையில் விலை உயர்ந்த செல்போன்கள், ஐபோன்கள், ஆண்ட்ராய்டு போன்கள் உள்ளன. ஈரோட்டை சேர்ந்த கவுதம், கார்த்திக் 2 பேர் வேலை பார்த்து வருகின்றனர். பூபதி, தரணிதரன் 2 பேரும் அவ்வப்போது செல்போன் கடைக்கு வந்து செல்வார்கள். கவுதம், கார்த்திக் 2 பேரும் தான் செல்போன் கடையை கவனித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடை திறக்கப்பட்டு வியாபாரம் முடிந்தவுடன் இரவு கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்துக் கடையை சேர்ந்தவர்கள் இது குறித்து கார்த்திக் மற்றும் கவுதமுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடைக்குள் சென்று பார்த்த போது கடையில் இருந்த 50 விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் கடையில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறி கிடந்தன. அதில் ரத்த கறையும் படிந்திருந்தன.
இதனையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது அதில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கையில் சாக்கு பையுடன் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே செல்வதும்,
அங்கு கடையில் இருந்த கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்பை திருடி கொண்டு சாக்கு மூட்டையில் போட்டு தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது. தப்பி செல்லும் போது கண்ணாடி காலில் குத்தி ரத்த கறை படிந்திருந்ததும் தெரிய வந்தது.
சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை அடிப்படையாக வைத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக நிறுவன பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.