அருப்புக்கோட்டையில் புகார் பெற ரூ.1500 வாங்கியதால் மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
- புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஷோபியா. இவருக்கும், தேனியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஷோபியா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி இதுதொடர்பாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கரூண் காரட் விசாரணை நடத்தினார். அப்போது புகார் கொடுக்க வந்தவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ரூ.1500 வாங்கியது தெரியவந்தது. இதன் அறிக்கையை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னியிடம் சமர்ப்பித்தார்.
இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமியை டி.ஐ.ஜி. சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.