உள்ளூர் செய்திகள்
சாலை மறியல் போராட்டம் நடந்தபோது எடுத்த படம்.

பொய் வழக்கு போடுவதாக கூறி போலீசாரை கண்டித்து பா.ஜ.க, இந்து முன்னணியினர் சாலை மறியல்

Published On 2022-09-21 03:59 GMT   |   Update On 2022-09-21 03:59 GMT
  • பா.ஜ.க, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி நால்ரோடு சத்தியமங்கலம் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

பு.புளியம்பட்டி:

நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இந்து மதத்துக்கு எதிராக பேசியதாக கூறி அவரை கண்டித்து நேற்று நீலகிரி தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், பு.புளியம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அவர்கள் பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகம் செய்தனர். இதற்கு போட்டியாக கடைகளை வழக்கம்போல் திறந்து கொள்ளலாம் என்று தி.மு.க. சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

இருப்பினும் நேற்று இந்த பகுதிகளில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி பா.ஜ.க, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி நால்ரோடு சத்தியமங்கலம் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கோவை-சத்தியமங்கலம் சாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் 1 மணி நேரத்துக்கு பின்பு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News