உள்ளூர் செய்திகள்

சூறாவளி காற்று எதிரொலி: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை

Published On 2022-11-10 04:48 GMT   |   Update On 2022-11-10 04:48 GMT
  • பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம், மண்படம் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
  • பாம்பன், ராமேசுவரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1,500 படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம், மீன்வளம் மற்றும் மீளவர் நலத்துறை, (தெற்கு) உதவி இயக்குநர் ராஜதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரின் மின்னஞ்சல் செய்தியில், மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கையில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே புதுமடம் முதல் ரோச்மா நகர் வரை பகுதிகளில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மீன்பிடி கலன் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கரையில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லவும், விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது விசைப்படகுகளை இடைவெளி விட்டு, கடல் அலைகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் கடலில் நங்கூரமிடவும் மீனவர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தலைவர்கள், மூக்கையூர் மீன்பிடி துறைமுக மேலாண்மைக் குழு ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம், மண்படம் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் பாம்பன், ராமேசுவரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1,500 படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News