உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை

Published On 2023-08-15 15:00 IST   |   Update On 2023-08-15 15:00:00 IST
  • அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
  • பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட சாமியார் மடத்தில் இருந்து நாளை மறுநாள் நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, மணலி சந்திப்பில் நிறைவு செய்கிறார்.

நாகர்கோவில்:

என் மண்... என் மக்கள்... என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் சென்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மக்களை சந்தித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மக்களிடம் மத்திய அரசின் திட்டங்களை பரப்பி வருகிறார்.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அவர் நடைபயணம் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டார். இதற்காக நேற்று இரவு அண்ணாமலை, கன்னியாகுமரி வந்தார். இரவில் தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று காலை 9 மணிக்கு அவர், 77வது சுதந்திர தின விழாவையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள பாரத மாதாவின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு காந்தி நினைவு மண்டபத்துக்குள் சென்ற அண்ணாமலை, அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தில் (நினைவிடம்) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரும் குமரி மாவட்ட பா.ஜ.க. பொருளாதார பிரிவு தலைவருமான அய்யப்பன், மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் மீனாதேவ், அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட களியக்காவிளை சென்ற அண்ணாமலை அங்கிருந்து நடைபயணத்தை தொடங்கினார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார். தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக சென்ற அவர், மக்களை சந்தித்தார். அவருக்கு ஏராளமானோர் வரவேற்பு கொடுத்தனர்.

இன்று அண்ணாமலை குழித்துறையில் பேசுகிறார். அந்த பகுதியில் உள்ள சமூக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசுகிறார். மாலை 4 மணிக்கு வெட்டுமணியில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, இரவில் இரவிபுதூர்கடை வரை செல்கிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

நாளை மறுநாள் (17-ந்தேதி) காலை பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட சாமியார் மடத்தில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, மணலி சந்திப்பில் நிறைவு செய்கிறார். மாலையில் தக்கலை சந்திப்பில் இருந்து நடைபயணம் தொடங்கும் அவர், வில்லுக்குறி சந்திப்பில் பயணத்தை முடிக்கிறார்.

மறுநாள் (18-ந்தேதி) நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து நடைபயணம் தொடங்குகிறார். வேப்பமூடு சந்திப்பு வரை செல்லும் அவர், அங்குள்ள காமராஜர் சிலை முன்பு பேசுகிறார். மாலையில் கன்னியாகுமரியில் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கிறார்.

Tags:    

Similar News