உள்ளூர் செய்திகள்

பல் பிடுங்கிய விவகாரம்: போலீஸ் அதிகாரி பல்வீர்சிங் உள்பட 14 பேர் கோர்ட்டில் ஆஜர்

Published On 2023-12-15 11:18 GMT   |   Update On 2023-12-15 11:18 GMT
  • சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்தனர்.
  • நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரம சிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்பட 14 பேர் மீது புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்தனர்.

மேலும் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் குற்ற எண்.3 வழக்கில் பல்வீர்சிங் உள்பட 6 பேர் மீதும், குற்றம் எண்.4-ல் பல்வீர்சிங் உள்பட 4 பேர் மீதும், குற்ற எண்.5 வழக்கில் பல்வீர்சிங் உள்பட 4 பேர் மீதும், குற்ற எண்.6 வழக்கில் பல்வீர்சிங் உள்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்பட 14 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன் பேரில் நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1-ல் நீதிபதி திரிவேணி முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்பட 14 பேரும் நேரில் ஆஜராகினர். இதனையொட்டி நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தொடர்ந்து வக்கீல் மகாராஜன் மற்றும் சி.பி.சி.ஐ. போலீசாரும் கோர்ட்டில் ஆஜராகினர்.

இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்த 4 வழக்குகளில் வி.கே.புரத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட குற்ற வழக்கு எண்.4ல் குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்ளிட்ட 4 பேருக்கு குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகளுக்கு மற்ற 3 வழக்குகளில் குற்ற பத்திரிகை நகல் வழங்க, வழக்கு தொடரப்பட்டவர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதனால் மற்ற 3 வழக்குகளில் இன்று குற்றபத்திரிகை வழங்கப்படவில்லை.

Tags:    

Similar News