உள்ளூர் செய்திகள்

காரைக்குடியில் மாணவிகள் முன்பு மோட்டார் சைக்களில் சாகசம்: 3 மாணவர்கள் கைது

Published On 2022-10-02 06:49 GMT   |   Update On 2022-10-02 06:49 GMT
  • காரைக்குடி பகுதியிலும் மாணவர்கள் மத்தியில் நவீன மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசை அதிகரித்துள்ளது.
  • ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் நின்று கொண்டு சென்ற ஒரு வாலிபர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.

காரைக்குடி:

தமிழகத்தில் தற்போது சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வாகன போக்கு வரத்துக்கு எளிதாக உள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் மத்தியில் வெளிநாட்டு மோட்டார் சைக்கிள் மோகம் அதிகரித்து வருகிறது. அவர்கள் அதிக சிசி கொண்ட நவீன மோட்டார் சைக்கிள்களை வாங்கி அதிவேகமாக இயக்கி வருகின்றனர்.

மற்ற வாகனங்கள் இரைச்சல் இல்லாமல் செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நவீன மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக சத்தம் எழுப்பியவாறு செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியிலும் மாணவர்கள் மத்தியில் நவீன மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசை அதிகரித்துள்ளது. பலர் இந்த வகை மோட்டார் சைக்கிள்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பாபுரம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவிகள் பலர் வீடு திரும்புவதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக 2 நவீன மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் திடீரென சாகசம் செய்ய தொடங்கி விட்டனர்.

முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர் நின்று கொண்டு சென்றார். அதனை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மாணவர்கள் அதனை செல்போனில் வீடியோ எடுத்தபடி சென்றனர்.

மாணவிகளை கவருவதற்காக அவர்கள் சாகசம் செய்தபோது ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் நின்று கொண்டு சென்ற ஒரு வாலிபர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதில் லேசான காயத்துடன் தப்பினார். இந்த காட்சிகளை அந்த பகுதியில் நின்ற சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்தனர்.

பொதுமக்களுக்கு இடையூறாக இந்த சாகசத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களும் அழகப்பா பாலிடெக்னிக் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையே மாணவர்களின் மோட்டார் சைக்கிள் சாகசம் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர்களின் இந்த அடாவடிக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களையும் கண்டு பிடித்தனர். இதில் 3 பேரை கைது செய்தனர். ஒருவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார். இதில் ஒரு மாணவர் மீது கஞ்சா விற்பனை செய்த வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தும் புல்லட் வகை மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வாகனங்களால் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றனர்.

Similar News