உள்ளூர் செய்திகள்

70 ஆண்டு பழமையான ஆலமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார்

Published On 2022-07-24 09:18 GMT   |   Update On 2022-07-24 09:18 GMT
  • ஆலமரத்தை அகற்ற அதிகாரிகள் ஜே.சி.பி.யுடன் வந்த போது அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

பூந்தமல்லி:

போருர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற மதகு மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கால்வாய் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.

இந்த நிலையில் மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் மழைநீர் கால்வாய் செல்லும் பாதையில் 70 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இதையடுத்து அந்த மரத்தை வேரோடு அகற்றி வேறு இடத்தில் நட நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

நேற்று காலை ஆலமரத்தை அகற்ற அதிகாரிகள் ஜே.சி.பி.யுடன் வந்த போது அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலமரம் வேரோடு அகற்றப்பட்டு வேறு இடத்தில் நட்டி பராமரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆலமரத்தின் பெரிய கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. பின்னர் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் ஆலமரம் வேரோடு பிடுங்கப்பட்டு சுமார் 100 மீட்டர் தொலைவில் நடப்பட்டது. தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் ஆலமரம் நட்டு வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆலமரம் மீண்டும நடப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆலமரத்தின் வேர் முழுவதும் 4 எந்திரங்களை பயன்படுத்தி முற்றிலும் அகற்றப்பட்டது. சுமார் 60 அடி உயரம் உள்ள இந்த மரத்தின் பெரிய கிளைகள் வெட்டப்பட்ட பின்னர் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு எடுத்து சென்று புதிய இடத்தில் நட்டோம்.

அதன் வேர்களை மாட்டுச்சாணம், மண்புழு உரம் மற்றும் வேரின் வளர்ச்சியை தூண்டும் உரங்களால் மூடி இடமாற்றம் செய்தோம்.

புதிய இடத்தில் ஆலமரத்தை வைப்பதற்கு முன்பு அது ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணும் உரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டது. இந்த மரத்தின் வளர்ச்சியை சில மாதங்கள் கண்காணிப்போம் என்றார்.

Tags:    

Similar News