உள்ளூர் செய்திகள்

பூங்காவிற்கு வருகை தந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.


வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 2 நாட்களில் 47 ஆயிரம் பேர் வருகை

Published On 2023-01-17 02:23 GMT   |   Update On 2023-01-17 02:50 GMT
  • இன்று பார்வையாளர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • பூங்காவை பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்கலாம்.

வண்டலூர் :

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 17 ஆயிரம் பேர் வருகை தந்து பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

நேற்று மாட்டுப்பொங்கல் தினத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதியான கோயம்பேடு, கிண்டி, அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, செங்குன்றம், செங்கல்பட்டு, மாமல்லபுரம் காஞ்சீபுரம், மதுராந்தகம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக வருகை தந்தனர்.

பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. பூங்காவில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூங்கா நிர்வாகம் செய்திருந்தது.

பொங்கல், மாட்டு பொங்கல் ஆகிய 2 தினங்களில் மட்டும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 47 ஆயிரம் பேர் சுற்றி பார்த்துள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவை 30 ஆயிரம் பேர் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

வண்டலூர் பூங்காவுக்கு கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொதுமக்களால் வண்டலூர் பூங்கா மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும், காணும் பொங்கல் அன்று பூங்காவுக்கு வருகை வரும் பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

காணும் பொங்கல் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவை பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்கலாம். பூங்காவில் உள்ள இந்திய காட்டுமாடு, காண்டாமிருகம், வெளிமான், கடமான், வராக மான், புள்ளிமான், சதுப்புநில மான், நீலமான் போன்ற தாவர வகை விலங்குகளுக்கு காலை 11 மணிக்கு மேல் உணவளிக்கும் காட்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.

அதேபோல் பூங்காவில் உள்ள யானைகள் சவரில் குளிக்கும் காட்சிகளை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும், பின்னர் 3 மணி முதல் 4 மணி வரையும் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். பூங்காவின் செயல்பாடுகளை விவரிக்கும் ஆவணப்படம் மற்றும் பூங்கா விலங்குகளின் திரை தொகுப்புகள் 2 பெரிய எல்.இ.டி. திரையில் திரையிடப்படுகிறது.

குடும்பமாக வரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள், நண்பர்கள் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு புகைப்பட கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கலை முன்னிட்டு பூங்காவுக்கு 50 ஆயிரத்துக்கும் மேல் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் பூங்கா நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சென்னை புறநகர், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News