உள்ளூர் செய்திகள்

காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்த 4 பேர் கைது

Published On 2024-03-27 10:54 GMT   |   Update On 2024-03-27 10:54 GMT
  • பன்றியை வெட்டி இறைச்சி துண்டுகளாக்கி 10 பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
  • சம்பவம் குறித்து 4 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.1,50,000-யை வசூலித்தனர்.

ஏரியூர்:

பென்னாகரம் அருகே பதனவாடி காப்புக்காடு நெருப்பூர் சிறுதங்கள்மேடு பகுதியில் கன்னிவலை வைத்து காட்டுப்பன்றியை பிடித்து கொன்று இறைச்சி துண்டுகளாக்கி 10 பொட்டலங்களாக விற்ற 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பதனவாடி காப்புக்காடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.

இங்கு நெருப்பூர் சிறுதங்கள் மேடு பகுதியில் மர்மநபர்கள் சிலர் காட்டுப்பன்றிகளை கன்னி வலை வைத்து வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில் பென்னாகரம் வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர் சக்திவேல், வனக் காப்பாளர் சங்கர், கணேஷ், செல்வகுமார் உள்ளிட்ட வனகுழுவினர் பதனவாடி காப்புக்காடு நெருப்பூர் சிறுதங்கள் மேடு வனபகுதியில் தீவிர ரோந்து பணியில் மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாது மகன் மணிமுத்து (வயது 33), ஆத்து மேட்டூர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கருப்பண்ணன் (32), சத்யாநகர் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் அபிராமன் (37), பண்ணவாடியான் காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வன்னியன் (50) ஆகிய 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.

அப்போது 4 பேரும் சேர்ந்து கன்னி வலை வைத்து காட்டு பன்றியை பிடித்து, அந்த பன்றியை வெட்டி இறைச்சி துண்டுகளாக்கி 10 பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து 4 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.1,50,000-யை வசூலித்தனர்.

வனப்பகுதியிலோ அல்லது வெளியே வரும் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களை கடும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் சிறைக்கு அனுப்பப்படும் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News