உள்ளூர் செய்திகள்

பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை

Published On 2023-06-16 05:46 GMT   |   Update On 2023-06-16 08:26 GMT
  • முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
  • கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

விழுப்புரம்:

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதியன்று நிறைவடைந்தது. தொடர்ந்து இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வக்கீல்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து, அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்களில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வக்கீல் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் வக்கீல் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந்தேதி (இன்று) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 12-ந் தேதி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் கோர்ட்டிற்கு முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கோர்ட்டிற்கு வந்த நீதிபதி புஷ்பராணி, 10.30 மணியளவில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.

அதன்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,5௦௦ அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

கோர்ட்டில் சிறை தண்டனை வழங்கப்பட்டவர்கள் உடனடியாக ஜாமின் மனு செய்து மேல் முறையீடு செய்ய சட்ட வீதிகள் உள்ளது. இதையடுத்து முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் வக்கீல்கள் விழுப்புரம் கோர்ட்டில் ஜாமீன் மனுவை உடனடியாக தாக்கல் செய்தனர். இது தொடர்பாக இன்று மதியம் 3 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதில் இவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நிருபர்களிடம் கூறினர்.

Tags:    

Similar News