திருப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது: வாகன சோதனையின் போது போலீசில் சிக்கினர்
- இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர்.
- சரியான நேரத்தில் கொள்ளையர்களை போலீசார் பிடித்ததால் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் பகுதிகளில் வழிப்பறி, நகைப்பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று இரவு திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆணையர் அனில் குமார் தலைமையில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் புதிய பேருந்து நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருப்பூர் ஸ்ரீநகரை சேர்ந்த பன்னீர்செல்வம், மும்மூர்த்தி நகரை சேர்ந்த மணிகண்டன், புதிய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பதும், அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர்கள் மீது கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைதான மணிகண்டன் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, அங்கு திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குணசேகரன் மற்றும் பன்னீர்செல்வம், திருப்பூர் டூம்லைட் ரஹீம் , குமார் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நண்பர்களாக பழகி உள்ளனர். இதில் பன்னீர்செல்வம் தவிர மற்ற 4பேரும் சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்து விட்டனர்.
பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்துள்ளார். திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள தொழில் அதிபர் வீட்டில் காவலாளி இல்லாததை நோட்டமிட்டு அறிந்து வைத்திருந்த மணிகண்டன், சிறையில் இருந்து வந்த பன்னீர்செல்வம் மற்றும் நண்பர்கள் குணசேகரன், ரஹீம், குமார் ஆகியோருடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற போது போலீசில் சிக்கியுள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் வேறு எங்கெல்லாம் கொள்ளையடித்துள்ளனர் என்பது போன்ற விவரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் கொள்ளையர்களை போலீசார் பிடித்ததால் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.