உள்ளூர் செய்திகள்

மத்திகிரி அருகே தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 3 பேர் கைது

Published On 2024-04-15 10:33 GMT   |   Update On 2024-04-15 10:33 GMT
  • சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
  • 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா ஒன்னப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 23). இவர் பூனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் மதுரை மாவட்டம் சாலைபுதூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் அந்த நிறுவனத்தில் பேக்கேஜ் பிரிவில் வேலை செய்து வந்தனர்.

அஜித்குமாரும் அவரது நண்பர்களும் பேளகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சதீசிற்கும், அஜித்குமாருக்கு நிறுவன வளாகத்தில் தகராறு ஏற்பட்டது.

இதனால் அஜித்குமார் வெளியே இருந்த தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அஜித்குமாரின் நண்பர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் அந்த நிறுவன வளாகத்திற்கு வந்தனர்.

அங்கு அவர்கள் சதீஷ் குமாரை சரமாரியாக தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து சதீஷ்குமாரின் தந்தை முனிராஜ் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தி, சதீஷ்குமாரை குத்தியதாக மதுரை சாலைபுதூர் அஜித்குமார் (27) பெத்தனபுரம் சச்சின் (19), மத்திகிரி பேளகொண்டப்பள்ளி சுனில்குமார் (26), திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அஜித்குமார் (24), மதுரை விலவன்குடி அஜய் (22), பொம்மண்டப்பள்ளி வினய் (24), மதுரை முத்துராமலிக தேவர் தெரு அருண்பாண்டி (32), மதுரை விளங்காமுடி வீரபாண்டிகுமார் (20), கடலூர் மாவட்டம் விருதாசலம் பிரகாஷ்ராஜ் (24) ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், கலகம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனது. இவர்களில் அருண்பாண்டி, வீரபாண்டி குமார், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 6 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News