காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ந் தேதி 2,118 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைக்கும்.
- கொரோனா என்ற நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 8739 பேர் உள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயனாளிகள் 39 வாரங்களுக்கு பிறகு இந்த முன் எச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம். இதுவரை 7 ஆயிரத்து 386 பேர் மட்டுமே (84.5 சதவீதம்) தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு (94.35 சதவீதம்) இலக்கையே எட்டி உள்ளது.
இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரத்து 321 நபர்கள் 2-ம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர். எனவே பயனாளிகளை நேரடியாக மற்றும் தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைக்கும்.
கொரோனா என்ற நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.
எனவே 10.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 2118 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு முன் எச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.