உள்ளூர் செய்திகள்

20 மீனவ கிராம மக்கள் 2 இடங்களில் மீண்டும் மறியல்

Published On 2023-12-23 10:04 GMT   |   Update On 2023-12-23 10:04 GMT
  • மீனவர்களின் படகுகள் வலைகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
  • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவொற்றியூர்:

மிச்சாங் புயலினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் முகத்து வாரம் பகுதியில் எண்ணெய் கழிவுகள் கலந்தது. இதில் மீனவர்களின் படகுகள் வலைகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த திருச்சிணாங்குப்பம், ஒண்டிக்குப்பம், நல்ல தண்ணி ஓடை குப்பம், திருவொற்றியூர் குப்பம், பலகை தொட்டி குப்பம், கே.வி.கே.குப்பம், பெரிய காசி கோவில் குப்பம், இந்திரா காந்தி குப்பம்.

புதுநகர் குப்பம், நடுக்காசி கோவில் குப்பம், ஓடை குப்பம் உள்ளிட்ட 12 மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறி பெண்கள் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பட்டினத்தார் கோவில் அருகில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் உள்பட ஏராளமனோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் சிதம்பர முருகேசன், போக்குவரத்து உதவி கமிஷனர் சீனிவாசன், தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. இப்ராஹிம், மீன்வளத்துறை இணை இயக்குனர் இந்திரா, திருவொற்றியூர் தாசில்தார் சவுந்தர்ராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல் எண்ணூர் முகத்துவார கடல் பகுதியில் மீன் பிடித்து வரும் நெட்டுக்குப்பம், தாளங்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், காட்டுக்குப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி போதாது, கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஆண், பெண் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மீன்பிடி படகுகளுக்கு ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் இன்று காலை பெண்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். அப்போது எண்ணெயில் சேதம் அடைந்த படகு மற்றும் வலைகளை சாலையின் நடுவே போட்டனர்.

மறியல் போராட்டம் காரணமாக சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் சரக்குகளோடு விரைவுச் சாலையில் வரிசையாக நிற்கின்றன. மேலும் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் வரை செல்லும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News