மாங்காடு அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
- கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
- கஞ்சா விற்பனை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து மாங்காடு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த கோவூரை சேர்ந்த மணி, சிலம்பரசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ள கஞ்சா விற்பனை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.