மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
- பள்ளி விடுமுறை என்பதால் 2 சிறுமிகளையும் சேத்துக்குழி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் பெற்றோர் விட்டு, விட்டு சென்று விட்டனர்.
- காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர்:
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் அறிவு செல்வன். இவருடைய அண்ணன் தமிழ்செல்வன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அறிவு செல்வன் மகள் சுஜித்ரா (வயது 11) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இதேபோல் தமிழ்செல்வன் மகள் சசிரேகா (வயது 7). 2-ம் வகுப்பு மாணவி.
இவர்களுடைய பாட்டி பாப்பாத்தி வீடு சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை அடுத்த பண்ணவாடி அருகே உள்ள சேத்துக்குழி கிராமத்தில் உள்ளது.
இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் 2 சிறுமிகளையும் சேத்துக்குழி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் பெற்றோர் விட்டு, விட்டு சென்று விட்டனர்.
இன்று காலை பாப்பாத்தி துணி துவைப்பதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றார். அப்போது உடன் 2 சிறுமிகளையும் அழைத்து சென்றார். 2 சிறுமிகளும் ஆற்றில் இறங்கி விளையாடினர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை கண்டு பாப்பாத்தி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து ஆற்றில் இறங்கினர். அதற்குள் சுஜித்ரா, சசிரேகா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்னர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.