கோவையில் 17 வயதில் இருந்து 40 ஆண்டாக திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது
- 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்து ஒன்றாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் நடத்தினர்.
கோவை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ஒப்பாணக்கார வீதி, பெரிய கடை வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை பறித்து செல்லும் சூழ்நிலை உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை தெலுங்குபாளையம் பிரிவை சேர்ந்தவர் வினோத்(வயது30). சம்பவத்தன்று இவர் பஸ்ஸில் சென்றார்.
ஒப்பணக்கார வீதி பிரகாசம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ்சில் பயணம் செய்த மர்மநபர் ஒருவர், இவர் வைத்திருந்த பணத்தை எடுத்து தப்பி சென்றார்.
இதுகுறித்து அவர் பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
துணை கமிஷனர் சண்முகம் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வீரபாண்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, பாமா, ஏட்டுக்கள் கார்த்திக், பூபதி உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட புலியகுளத்தைச் சேர்ந்த அந்தோணி என்ற மண்டை அந்தோணி(59), கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன்(35), சிங்காநல்லூரை சேர்ந்த விவேகானந்தன் (55) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்களில் அந்தோணி என்ற மண்டை அந்தோணி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
மேலும் இவர் தனது 17 வயதில் இருந்து தற்போது வரை 40 ஆண்டுகளாக தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது கூட்டாளிகளான மணிகண்டன், விவேகானந்தன் ஆகியோர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர்கள் ஜெயிலில் நண்பர்கள் ஆனதும், பின்னர் 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்து ஒன்றாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் நடத்தினர்.