உள்ளூர் செய்திகள்

சென்னையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 1,705 விளம்பர பலகைகள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை

Published On 2022-08-14 02:52 GMT   |   Update On 2022-08-14 02:52 GMT
  • பொதுமக்கள் அனைவரும் ‘நமது குப்பை நமது பொறுப்பு’ என்பதனை உணர்ந்து பொது இடங்களில் தேவையற்ற கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • விதிமுறைகளுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும்.

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும் நேற்று தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள 1,705 விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.

தீவிர தூய்மை பணிகளில் 171.28 டன் கழிவுகள், சாலையோரங்களில் கிடந்த தேவையற்ற இரும்பு போன்ற பொருட்கள் 7.06 டன் ஆகியவையும் அகற்றப்பட்டன. அதேபோல் மாநகராட்சியும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து பெசன்ட் நகர் கடற்கரையில் 'சுத்தமான கடற்கரை பாதுகாப்பான கடல்' என்ற கடலோர தூய்மை பணிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதன் மூலம் பெசன்ட் நகர் கடற்கரையில் 750 கிலோ திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் 'நமது குப்பை நமது பொறுப்பு' என்பதனை உணர்ந்து பொது இடங்களில் தேவையற்ற கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் விதிமுறைகளுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News