உள்ளூர் செய்திகள்

புகைப்பட கண்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தஞ்சையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி - அமைச்சர் பங்கேற்பு

Published On 2023-03-18 09:30 GMT   |   Update On 2023-03-18 09:30 GMT
  • அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.
  • தஞ்சாவூர் மாவட்ட கவிஞர்கள் பங்குபெறும் கவியரங்கம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 10 நாட்கள் நடத்தப்படும்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் " ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி"என்ற தலைப்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் இந்து சமய அறநிலையத்துறை , தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

அதுமட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய அரசு திட்டங்களின் தொகுப்பு புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளது.

புகைப்பட கண்காட்சியினை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் புத்தக கண்காட்சி,உணவு திருவிழா சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் கண்டு மகிழ பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து அமையப்பட்டுள்ளது.

மேலும் புகைப்பட கண்காட்சி அரங்கில் தினம் தோறும் மாலை நேரத்தில் பொதுமக்களின் மனம் கவரும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, அரசு இசைப்பள்ளி பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்ட கவிஞர்கள் பங்குபெறும் கவியரங்கம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 10 நாட்கள் நடத்தப்படும்.

அரசின் திட்டங்களை கலை அறிந்து இலக்கிய நிகழ்ச்சிகளாக பயன்பெறும் வகையிலும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் பாரம்பரிய உணவு குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும், நெகிழிக்கான மாற்று பொருட்களை விளக்கும் வகையிலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் கண்டுகளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளபட்டது.

இந்த கண்காட்சி வருகின்ற 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார், தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News