உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி

Published On 2023-11-18 13:44 IST   |   Update On 2023-11-18 13:44:00 IST
  • பக்தர்கள் திரண்டு வழிபாடு
  • நாளை காலை 9 மணிக்கு திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா

கோவை,

ஐப்பசி மாத அமாவாசை முடிந்து முருகனுக்கும், சூரனுக்கும் இடையே நடந்த போரில் சஷ்டி அன்று சூரனை வதம் செய்து முருகன் வெற்றி பெற்றார். இதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் இந்த நாட்களில் பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர்.

விரதம் இருக்கும் பக்தர்கள் சஷ்டி தினமான இன்று தங்கள் விரதத்தை நிறைவு செய்கிறார்கள். இதையொட்டி முருகன் கோவில்களில் இன்று அதிகாலையில் சஷ்டி அலங்கார பூஜை நடந்தது. மாலையில் முருகன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேல் வாங்கு தலும், 3.30 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. இதையொட்டி அங்கு காலை முதலே பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.

கூட்டம் கருதி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் கோவில் பஸ்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான பக்தர்கள் படிகளில் ஏறிச் சென்று முருகனை வழிபட்டனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

இதேபோல கோவை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. சுக்கிர வார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் மாலை 5.30 மணிக்கும், சிரவணபுரம் கவுமாரமடாலயத்தில் உள்ள தண்டபாணி கடவுள் கோவிலில் மாலை 4.30 மணிக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை சத்ரு சம்ஹார ஹோமம், அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 3.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோவில், மேட்டுப்பாளையம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், குமரன் குன்று முருகன் கோவில், ஓதிமலை ஆறுமுகசுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், குரும்ப பாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதி, கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில், வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News