உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அய்யப்ப பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

Published On 2022-12-19 08:15 GMT   |   Update On 2022-12-19 08:15 GMT
  • எல்லைப்பகுதியான குமுளியில் இந்த ஆன்லைன் பதிவை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். இதற்காக அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.1000 லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
  • அய்யப்ப பக்தர் கொடுத்த பணத்தை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரையும் மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்:

சபரிமலையில் தற்போது மண்டல பூஜைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர். இவர்கள் தமிழக - கேரள எல்லையில் குமுளி வழியாக செல்கின்றனர். இதனால் இந்த சாலையில் வாகனங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

கேரளாவிற்குள் நுழையும் இந்த வாகனங்களுக்கு தற்போது ஆன்லைனில் பெர்மிட் பதிவு செய்யப்படுகிறது. எல்லைப்பகுதியான குமுளியில் இந்த ஆன்லைன் பதிவை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். இதற்காக அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.1000 லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஷாஜி ஜோஸ் தலைமையிலான போலீசார் தமிழக பகுதிக்கு வந்து அய்யப்ப பக்தர்களுடன் பக்தர்கள் போல் சென்றனர். அப்போது எல்லையில் உள்ள கேரள சோதனைச்சாவடியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், அலுவலக உதவியாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பணியில் இருந்தனர்.

வாகனத்துக்கு ஆன்லைன் பதிவு இருந்தும் அவர்களிடம் ரூ.1000 லஞ்சம் கேட்டனர். அப்போது அய்யப்ப பக்தர் கொடுத்த பணத்தை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரையும் மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் ஏற்கனவே பக்தர்களிடம் வசூல் செய்து வைத்திருந்த ரூ.5000 ஆயிரம் லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

அய்யப்ப சீசன் களைகட்டி வரும் நிலையில் பக்தர்களிடம் போலீசார் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தொடர்ந்து போலீசார் இது போன்ற சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News