உள்ளூர் செய்திகள்

வாகனங்கள் தொடர்பான பதிவேடுகளை பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை

Published On 2023-01-29 09:14 GMT   |   Update On 2023-01-29 09:14 GMT
  • போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • பராமரிக்கப்படா விட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை,

கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

அதனை தொடர்ந்து பழைய வாகனங்களை விற்பனை செய்வதிலும், வாங்குவதிலும் நடக்கும் தவறுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

குறிப்பிட்ட அந்த கார் முதலில் வாங்கிய நபரிடம் இருந்து அடுத்தடுத்து 10 பேருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தாலும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இத்தகைய குளறுபடி நடைமுறைகளுக்கு முடிவு கட்ட திட்டமிட்ட போலீசார் காலாவதியான மற்றும் பழுதடைந்த வாகனங்களை உடைப்பதற்கு, வாங்கும் வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இதில் வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் பழைய வாகன வியாபாரிகள் கூட்டம் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது முறையாக நடத்தப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட பழைய வாகன வியாபாரிகள், பணிமனை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

போக்குவரத்து துைண கமிஷனர் மதிவாணன் தலைைம தாங்கினார். கூடுதல் துணை கமிஷனர் போக்குவரத்து திட்டமிடல் சிற்றரசு, உதவி கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் துணை கமிஷனர் மதிவாணன் பேசியதாவது:-

பழைய வாகனங்களை வாங்குவதையும், விற்பதையும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே செய்ய வேண்டும்.

உடைப்பதற்கு வாகனங்களை வாங்கும் ஒவ்வொரு வியாபாரியும் கடை அல்லது பணிமனையில் கட்டாயம் அது குறித்த பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

வாகன உரிமையாளர்களின் ஆதார் எண், அடையாள அட்டை விபரங்கள், போன் எண் ஆகியவை சேகரிக்கப்பட வேண்டும். அந்த வாகனம் சட்ட பூர்வமான வாகனமா என்று உறுதி செய்த பிறகே வாங்க வேண்டும்.

வாகனங்கள், உதிரிபாகங்களை விற்பனை செய்யும் போது, இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இந்த பதிவேடுகளை போலீசார் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வார்கள். பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்படா விட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News